பிரான்சில் அடுக்கு மாடிக் கட்டிடத்தின், நான்காவது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Rue Marx-Dormoy பகுதியில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த சனிக்கிழமை 4 வயது குழந்தை ஒன்று நான்காவது மாடியில் அழுத நிலையில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது இதைக் கண்ட Mamoudou Gassama(22) என்ற இளைஞர் உடனடியாக, அதவாது 30 நொடிகளில், ஒரு ஸ்பைடர் மேன் போன்று, கட்டத்தின் மீது ஏறிச் சென்று குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தின் காரணமாக Mamoudou Gassama-வுக்கு உடலில் ஆங்காங்கே சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தையின் அப்பா வெளியில் ஷொப்பிங் சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை எப்படி அங்கே வந்தது, என்பது குறித்து சரிவர தெரியாத காரணத்தினால் பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






