இந்தியாவிலேயே முதல் முறையாக பார்வையற்ற பெண் மாவட்ட ஆட்சியராக பதவியேற்பு!!

389

இந்தியாவில் முதல் முறையாக பார்வையற்றை பெண்ணொருவர், கேரள மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்த தம்பதியர் என்.பி.பட்டில்-ஜோதி. இவர்களது மகள் பிரஞ்ஜாலின் பட்டில். இவருக்கு 2 வயதாக இருந்தபோது காய்ச்சலால் கண்பார்வை பறிபோனது.

எனினும், இவரது பெற்றோர் தைரியமும், தன்னம்பிக்கையும் அளித்து இவரை வளர்த்ததால், தனது விடாமுயற்சியால் மும்பையில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்தார்.

அதன் பின்னர், டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் டாக்டர் பட்டம் முடித்தார். பிரஞ்ஜாலின், வளர வளர சமூக சேவையில் ஈடுபாடு இருந்ததால், கடந்த 2014ஆம் ஆண்டு IAS தேர்வு எழுதினார். ஆனால், அவருக்கு அப்போது 773ஆம் இடமே கிடைத்தது.

எனினும் சற்றும் மனம் தளராத பிரஞ்ஜாலின், ரெயில்வே துறையில் தேர்வாகி கணக்கு பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின்னர், 2017ஆம் ஆண்டு மீண்டும் IAS தேர்வு எழுதினார். இம்முறை 124வது இடத்தை பிடித்தார்.

இதன்மூலம், மாவட்ட ஆட்சியராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றார் பிரஞ்ஜாலின்.

அப்போது தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது பெற்றோர் தன்னை இருக்கையில் அமர வைக்க வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் பிரஞ்ஜாலின் அனுமதி கேட்க, அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

பின்னர், அவரது தாய் ஜோதி மகளை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர வைத்தார். நேரடி IAS தேர்வில் வெற்றி பெற்று, இந்தியாவிலேயே கண்பர்வையற்ற பெண்ணொருவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.