வவுனியா தபாலகத்தில் பணியாற்றும் இரு ஊழியர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வவனியா பொது வைத்தியசாலையில் உயர்குருதி அழுத்ததினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா தபாலகத்திலிருந்து கட்டாய இடமாற்றத்தில் நெடுங்கேணிக்கு இரு பெண்களை தபாலகத்திற்கு செல்வதற்கு தபாலகத்தின் பொறுப்பதிகாரி பணித்துள்ளார். இதனை குறித்த பெண்கள் நிராகரித்துள்ளனர்.
இதையடுத்து தபாலக பொறுப்பதிகாரி இடமாற்றத்திற்கு செல்லாவிட்டால் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த பெண்களுக்கு உயர்குருதி அழுத்தம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த இரு பெண்களும் கடந்த ஐந்து வருடகாலமாக நேரியகுளம், நெடுங்கேணி பகுதிகளில் தபாலகத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பதுடன் தற்போது நிரந்தர இடமாற்றம் பெற்று வவனியா தபாலகத்தில் பணியாற்றி வந்தனர். இதில் ஒரு பெண் ஊழியர் நிரந்தர இடமாற்றம் பெற்று ஒரு மாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட தபால் நிலைய அத்தியட்சகரிடம் வினவியபோது, நெடுங்கேணியிலுள்ள தபாலகம் மூடவேண்டிய நிலையிலுள்ளதால் அதனைத்தடுக்கும் நோக்குடன் வவுனியாவில் பணியாற்றிய இரு ஊழியர்களை அப்பகுதிக்கு இடமாற்றம் செய்யுமாறு தபால் நிலையப் பொறுப்பதிகாரியிடம் நான் கூறியதையடுத்து குறித்த அதிகாரி இவ் இரு பெண்களையும் தெரிவு செய்திருந்தார்.
இத் தெரிவில் முறைகேடுகள் இருப்பதனை அறிந்து இது தொடர்பாக மீள் பரிசீலனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
இதேவேளை வவனியா தபால் நிலையத்தில் 10 வருடங்களுக்கு மேல் இடமாற்றம் பெற்றுக்கொள்ளாமல் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





