டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே தற்போது வெளிவருவதில்லை : படவிழாவில் ராதிகா சரத்குமார்!!

271

rathikaநடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் புதிய படம் மாலினி 22 பாளையங்கோட்டை. இப்படத்தில் கிருஷ்ணா ஜே.சதார், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு அரவிந்த் சங்கர் இசையமைக்கிறார். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படத்தின் ஓடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகைகள் நித்யா மேனன், ராதிகா சரத்குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இப்படத்தின் ஓடியோவை நடிகர் கமல் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். டிரைலரை இயக்குனர் கே.பாலச்சந்தர் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீப்ரியாவும் நானும் குழந்தையில் இருந்தே பழக்கம். சினிமாவில் அவர் ஒரு நடிகையாக நன்றாக நடித்திருந்தார். தற்போது இயக்குனராக களமிறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு புத்திசாலி பெண் என்று அவரைக் கூறலாம்.

ஆனால், அவர் அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டார். ஒரு பெண்ணாக இருந்து சினிமாவில் செலவு பண்ணுவது என்பது ரொம்பவும் கஷ்டம். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். இப்போது ஸ்ரீப்ரியாவும் அதையெல்லாம் சமாளித்து, சமூக உணர்வோடு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இன்று வரும் பல படங்களில் டாஸ்மாக் காட்சிகளும், ஹீரோ காலையில் எழுந்ததும் எந்த பெண்ணை சைட் அடிப்பது என்று பேசுவது, அப்பாவை மகன் இழிவாக பேசுவது போன்ற வசனங்கள் நிறைந்த படங்களாகவே வருகின்றன. அவற்றையும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இருந்தாலும், வித்தியாசமான படங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அதையும் ரசிக்க ஒரு ரசிகர் வட்டம் உள்ளது. அந்த வரிசையில் இந்த படமும் வந்திருக்கிறது இவ்வாறு அவர் பேசினார்.