தன் மகளை நினைத்தால் பயமாக உள்ளது : சூர்யா!!

517

sooryaஎதிர்கால சூழலில் என் மகளை நினைத்துப் பார்த்தால் பயமாக உள்ளது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். ரீப்ரியாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, மாலினி 22 பாளையங்கோட்டை படம் தொடங்கிய நாளிலிருந்தே எனக்கு தெரியும். படம் என்பது இரண்டரை மணி நேர எண்டர்டெயின்மெண்டாக இல்லாமல், படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போனபிறகும் படம் பார்த்த தாக்கம் இருக்கவேண்டும்.

ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் படங்கள் எத்தனை என்பதை கடைசி 3 வருடங்களில் விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்ற துறையில் இருப்பவர்களிடம் பேசும்போது நல்ல கருத்துள்ள படங்கள் என்றால் 2-3 படங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

இதில் நானும் அடக்கம் என்பதை மறுக்கவில்லை. தற்போதைய தலைமுறையின் மீது பெரிய பழியே இருக்கிறது. என் மகளின் தலைமுறை வெளிவரும்போது சமூகம் எப்படி இருக்கும் என்று ஒரு பயம் கண்முன்னே தெரிகிறது.

இன்று ஒரு அமெரிக்க பேப்பரில் அஸ்ஸாம் மாநிலத்தில் ரேப் ஃபெஸ்டிவல் நடப்பதாக எழுதியிருக்கிறார்கள். அதை உண்மை என நம்பி ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் யாரும் இந்தியாவிற்கு போகாதீர்கள் என்று சொல்லிவருகிறார்கள்.

நாட்டில் நடப்பதை சினிமாவாக எடுக்கிறோம். சினிமாவில் எடுப்பதுதான் நாட்டில் நடக்கிறது. நம்மிடம் மிகவும் பலமான காட்சி ஊடகம் இருக்கிறது.

இதை வைத்து நாம் செய்ய நினைப்பதை செய்யலாம். புதுமைப்பெண், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்கள் வேண்டும் என தோன்றுகிறது. கலைத் துறையிலும் தொழில் நுட்பத்துறையிலும் பெண்கள் அதிக அளவில் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதற்கு இந்த படம் ஒரு முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசினார்.