ரஜனிகாந்தை நீங்கள் யார் என கேட்டதற்கு இதுதான் காரணம் : இளைஞர் விளக்கம்!!

719

நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ரஜினிகாந்தை வேதனைப்படுத்துவதற்காக தான் கேள்வி கேட்கவில்லை என சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சந்தோஷ் ராஜ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மேலும் 46 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ரஜினிகாந்த் சென்ற போது தான் அவரைப் பார்த்து “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று சந்தோஷ் ராஜ் கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினியின் முகம் மாறியது.

என்றாலும் மெல்ல சிரித்தபடி சமாளித்தபடி, “நான் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து வருகிறேன்” என்றார். உடனே வாலிபர் சந்தோஷ் ராஜ், “சென்னையில் இருந்து இங்கு வர 100 நாட்கள் ஆகுமா?” என்றார்.

சந்தோஷ் ராஜ் சூடாக கேள்விகள் எழுப்பியதைத் தொடர்ந்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தபடி ரஜினி அங்கிருந்து நகர்ந்து விட்டார். இந்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியது.

சந்தோஷ் ராஜுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கருத்துக்களை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து சந்தோஷ் ராஜ் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கு ரஜினி படங்கள் மிகவும் பிடிக்கும். நானும் ரஜினி ரசிகன் தான். கபாலி படத்தை தியேட்டருக்குள் சீட் கிடைக்காமல் நின்றபடியே பார்த்தவன் நான். அவரைத் தான் நான் என் ஹீரோவாக நினைத்துள்ளேன். அவருக்குத்தான் தமிழகத்தில் மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.

ஸ்டைல் மன்னனான அவரை கமல்ஹாசனுடன் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்டவர் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் ஓட்டு மொத்த ஆதங்கமாகும்.

100 நாட்களுக்கும் மேலாக நாங்கள் ஸ்டெர்லைட்டை மூடக்கோரி போராடினோம். அந்த சமயத்தில் ரஜினி எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் எங்கள் போராட்டம் மேலும் பலமும், வலிமையும் பெற்றிருக்கும். நாங்களும் அவரை புதிய கோணத்தில் பார்த்து இருப்போம்.

ஆனால் நடந்ததெல்லாம் எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. எங்கள் போராட்டத்தை பற்றி அவர் இந்த அளவுக்கு விமர்சித்து பேசுவார் என்று நினைக்கவில்லை. எனவே தான் நான் இதுபற்றி ரஜினியிடம் கேள்வி கேட்க நினைத்தேன்.

எனது கோபம் எல்லாம், எங்களுக்கு தேவைப்படும் போது ரஜினி வரவில்லையே என்பதுதான். அதைத்தான் சற்று மாறுபட்ட விதமாக ரஜினியிடம் நான் கேள்வியாக எழுப்பினேன். ஆனால் எனது கேள்வி மக்கள் மத்தியில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ரஜினியை வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அந்த கேள்வியைக் கேட்கவில்லை. புகழ்பெற்ற ஒருவரை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம்தான் என்னை அப்படி கேள்விக் கேட்க வைத்தது.

நான் ரஜினியிடம் மட்டும் கேள்வி எழுப்பவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜு வந்த போது கூட நான் ஒரு கேள்வி எழுப்பினேன். “தூத்துக்குடி மக்கள் அனைவரும் பணம் திரட்டி தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியுமா?” என்று கேட்டேன்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போதும் நான் கேள்வி எழுப்பினேன். “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.அதற்கு அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, “ஆம் இருக்கிறது” என்றார்.

உடனே நான், “அப்படியானால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டேன்.எனது இந்த கேள்விக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார்.

அடுத்தடுத்த படுக்கையில் இருந்தவர்களை சந்தித்த அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னிடம் திரும்பி வந்தார்.“தம்பி… நீங்கள் கேட்ட கேள்வியை நான் குறித்து வைத்துள்ளேன். நிச்சயமாக எங்களால் முடிந்த நல்லதை செய்வோம்” என்றார்.

என்னிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு வாக்குறுதி அளித்த அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இவ்வாறு சந்தோஷ்ராஜ் கூறினார்.