வவுனியாவில் புகையிலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்!!

636

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பிரிவின் அனுசரணையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட புகையிலையினால் ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் வீதி நாடகம் வவுனியா தொற்றா நோய் வைத்திய அதிகாரி சுதர்சினி தலைமையில் இன்று (31.05.2018) வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களம் முன்பாக , புதிய பேரூந்து நிலையம் முன்பாக, இலுப்பையடி சந்தி , மக்கள் வங்கி பிரதான கிளை முன்பாக இடம்பெற்றிருந்தது

இவ் வீதி நாடகத்தினை வவுனியா கல்மடு மகா வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பிடிப்பதின் விளைவுகள்

முயன்றால் தடுக்கக்கூடிய இறப்புக்குக் காரணமாக இருக்கக்கூடிய காரணங்களில் ஒன்று புகையிலை. ஒவ்வொரு வருடமும் 5 மில்லியன் மக்களுக்கு மேல் புகையிலையினால் மக்கள் இறக்கின்றார்கள்.

ஒரு ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ், மலேரியா, காசநோய் போன்ற அனைத்து நோய்களிலும் இறக்க கூடியவர்களைவிட புகையிலையால் இறப்பவர்களே அதிகம்.

புகையிலை மட்டுமே சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டு, தயாரிப்பாளரின் எண்ணப்படியே உபயோகிப்பவர்களைக் கொல்லும் நுகர்பொருளாகும். புகைபிடிப்பவர்களில் பாதிபேர் புகையிலை தொடர்பான வியாதிகளினாலேயே இறக்கிறார்கள்.

இரண்டாம் நிலை புகைப் பிடிப்பவர்களுக்கும், (அதாவது புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினை சுவாசிப்பவர்கள்) புகையிலையினால் ஏற்படும் எல்லா நோய்களும் ஏற்படுகிறது.

புகையிலை நிறுவனங்கள் மாதந்தோறும் 10 மில்லியன் டொலர் அளவு பணத்தைச் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களை புகைப்பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றனர்.

மேலும் புகைப்பிடிப்பவர்கள் அப் பழக்கத்தை, விட்டுவிடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள். விளம்பரங்களின் மூலமாகவும், கவனமாக, அழகாகவும், தயாரிக்கப்பட்ட புகையிலைப் பக்கெட்டுகள் மூலமாகவும், புகையிலை நிறுவனங்கள் மக்களின் கவனத்தை திசைதிருப்பி, புகையிலை மற்றும் அதனால் செய்யப்படும் பொருள்களினால் ஏற்படும் உயிர்கொல்லித் தீமைகளை மக்கள் மறந்துபோகும்படி செய்கின்றன.

புகையிலைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) உருவாக்கிய நெறிமுறைகளின்படி, புகையிலையினால் ஏற்படும் விளைவுகளை ஒழிக்க எச்சரிக்கை படங்கள் மற்றும் வாசகங்கள் மூலம் அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.

சர்வதேச ஒப்பந்தப்படி இந்நோக்கினை எட்ட, எம்பவர் (MPOWER) தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்துகிறார்கள்.

உடல்நலம் குறித்த எச்சரிக்கைகள், குறிப்பாக படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்கள், புகையிலை உபயோகிப்பவர்களை அப்பழக்கத்தை விட்டு விடவும், புகைப்பிடித்தலுக்கு அடிமையாகாமல் இருக்க வைக்கவும் உதவுகின்றன.

ஆனாலும், புகைபிடிப்பவர்களில் பத்தில் ஒன்பது பேர் புகையிலைப் பெட்டியின் மீது எவ்விதமான எச்சரிக்கையும் தேவையில்லாத நாடுகளில்தான் வாழ்கிறார்கள்.

நிகோடின் என்பது மிகமோசமாக அடிமைப்படுத்தக் கூடிய போதைப் பொருளாகும். மக்களுக்கு அதனுடைய தீமைகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு உண்டாக்கும் பயணத்தில் நாம் நீண்டதூரம் செல்லவேண்டும்.

அதனால் புகையிலைப் பெட்டிகளின் மீது எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் அச்சிடுதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைத்து மக்களின் வாழ்க்கையைக் காக்க எளிய, சிக்கனமான, பயனுறு வழியாகும்.