வவுனியாவில் நேற்றைய தினம் அதிகாலையில் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கடத்தல் சம்பவம் லண்டனில் இருக்கும் தனது கணவராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனைவி இன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்துள்ளன.
வவுனியா – குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதுடைய யுவதி ஒருவர் லண்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்தியாவுக்கு சென்று திருமணம் செய்துள்ளார்.
கணவன் லண்டன் சென்றதும் குறித்த யுவதி வவுனியாவில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இதன் பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த நிலையில் கணவன் ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பது குறித்த யுவதிக்கு தெரியவந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக கடந்த 5 மாதங்களாக குறித்த யுவதி கணவனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதன்போது கணவன் தனது குழந்தையை தருமாறு கேட்டுள்ளதுடன், குழந்தையை கடத்துவேன் எனவும் தொலைபேசியில் மிரட்டியுள்ளதாக யுவதி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா குட்செட் வீதி ஒழுங்கையில் உள்ள வீட்டில் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் ஆறு பேர் கொண்ட குழுவினரால் நேற்று அதிகாலை கடத்தப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-தமிழ்வின்-





