சென்னை அண்ணா நகரை சேர்ந்த பெண் ஒருவர் செங்கல்பட்டு பழவேலி அருகே எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியிருந்ததால் உடலுக்கு சொந்தக்காரரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கேரளாவில் காணாமல் போன மாணவி ஜேசா வாக இருக்கலாம் என்கிற அடிப்படையில் கேரளா பொலிஸார் வந்து பார்த்து விட்டு ஜேசா மூக்கு குத்தியிருக்க மாட்டார் என்பதால் இது ஜேசா இல்லை என்று உறுதி செய்தது.
இந்நிலையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷ மேரியை காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் அளித்ததால், அவர்களை அழைத்து சென்று சடலத்தை அடையாளம் காண சொன்னது காவல்துறை.
இறந்து போன சடலம் கடந்த ஞாயிறன்று காணாமல் போன தங்கள் மகள்தான் என்று பெற்றோர் உறுதி செய்தனர்.
பொக்கிஷ மேரி எதற்காக பழவேலி சென்றார் அவர் கடத்தப்பட்டாரா என்று விசாரணை செய்ததில் அவர் அண்ணா நகரை சேர்ந்த பாலா என்பவரை எட்டு வருடமாக காதலித்ததாகவும் பாலாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது என்பதால் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள பொக்கிஷ மேரி மறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால் தனது இரண்டாம் திருமண கனவு கலைந்து போன ஆத்திரத்தில் காதலன் பாலா பொக்கிஷ மேரியை பழவேலிக்கு அழைத்து சென்று தன் நண்பன் உதவியுடன் உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவ்விருவரும் சிறையில் இருக்கின்றனர். காதலின் பெயரால் நடந்த கொடூரம் அப்பகுதி மக்களை உறைய செய்திருக்கிறது.







