தன் குழந்தையைப் பணயம் வைத்து முதலாளி மகனைக் காப்பாற்றிய தொழிலாளி : திரில் சம்பவம்!!

627

விருது நகரில் பட்டப்பகலில் முதலாளி மகனைக் கடத்தி வரத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகளை பிணைக்கைதியாக்கிய கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

விருதுநகர் ஆத்து மேடு பகுதியை சேர்ந்த ராஜ்திலக், தனது முதலாளி சண்முகக்கனியின் பருப்பு ஆலையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

சண்முகக்கனியிடம் பணம் பறிக்க நினைத்த மூன்று பேர் கொண்ட குழு ஒன்று ராஜ்திலக்கை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது.

அதன்படி ராஜ்திலக் வீட்டிற்கே சென்று கத்திமுனையில் ராஜ்திலக்கை இருசக்கர வாகனத்தில் கடத்தி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டில் வைத்து மிரட்டியிருக்கிறது அந்த குழு.

சண்முகக்கனியின் 5 வயது மகனை ராஜ்திலக் அழைத்து வர வேண்டும் என்றும் அது வரை ராஜ்திலக்கின் ஒன்றரை வயது மகளை பிணையமாக தங்களிடம் விட்டு செல்ல வேண்டும் என்று அக்கும்பல் கூறியுள்ளது.

அதன்படியே தன் மனைவியிடம் தொலைபேசி மூலம் மகளை இரு சக்கர வாகனத்தில் வரும் இருவரிடம் கொடுத்தனுப்புமாறு கூறியிருக்கிறார் ராஜ்திலக்.

மனைவியும் அவ்வாறே குழந்தையை கொடுத்து விட்டிருக்கிறார். சண்முகக்கனியின் மகனை கூட்டி வந்தபின் ராஜ்திலக்கையும் அவரது குழந்தையையும் விடுவிப்பதாக கூறியிருக்கின்றனர் கடத்தல்காரர்கள்.

தனது ஒன்றரை வயது குழந்தையை கத்திமுனையில் விட்டு விட்டு அங்கிருந்த கிளம்பிய ராஜ்திலக் நீண்ட யோசனைக்குப்பின் விருது நகர் கிழக்கு காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராஜ் திலக் குழந்தையோடு ஒருவர் மட்டும் இருந்ததை பார்த்துள்ளனர்.

அவரைக் கைது செய்து குழந்தையை மீட்டு ராஜ்திலக்கிடம் கொடுத்த காவல்துறையினர் அவரின் துணிச்சலை பாராட்டினர்.

கடத்தல் குழுவினரில் மாட்டியவர் பெயர் வெங்கடேஷ் என்றும் மற்றவர்கள் பெயர்கள் பிரபு மற்றும் அசோக் என்றும் அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.