திருச்சி காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவன் மனைவி தற்போது திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
திருச்சி சிறுகனூர் இந்திரா காலனியை சேர்ந்தவர்கள் வின்சென்ட் (43) சோபியா (30). வெளிநாட்டில் ஓட்டுநராக வின்சென்ட் பணிபுரிகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜோதிவேல் எனும் இளைஞர் (23) சோபியாவிடம் தகராறு செய்துள்ளார். தீவிரமடைந்த தகராறில் ஜோதிவேலுவால் சோபியா தாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிய காவல்துறையிடம் சென்ற போது இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறது காவல்துறை.
வெளிநாட்டில் இருந்து வந்த வின்சென்ட் தன் மனைவியை தாக்கிய ஜோதிவேலுவிடம் அது பற்றி கேட்டுள்ளார். வாய்தகராறு ஏற்பட்டு கொண்டிருக்கும்போதே ஜோதிவேலுவின் மனைவி தன் கணவரை தாக்க வந்துள்ளதாக காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார்.
புகாரை அடுத்து வின்சென்ட் வீட்டிற்கு சென்ற காவலர்களிடம் தான் மது அருந்தியிருப்பதால் காலை ஸ்டேஷன் வருவதாக கூறியிருக்கிறார் வின்சென்ட்.
ஆனால் காவல்துறையினர் வின்சென்டை அடித்து இழுத்து செல்ல முயன்றனர். அப்போது தடுப்பதற்காக உதறிய வின்சென்டின் கைகள் காவல் ஆய்வாளர் மீது பட்டுள்ளது. தன்னை தாக்க முயன்றதாக கருதிய ஆய்வாளர் செல்வராஜ் மேலும் சிலரை காவல் நிலையத்திலிருந்து வர சொல்லியிருக்கிறார்.
அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வின்சென்ட்டை அடித்து உதைத்திருக்கின்றனர். இதனை தடுக்க வந்த மனைவி சோபியாவையும் அடித்து உதைத்த காவல்துறை அவரது உடைகளையும் கிழித்திருக்கிறது.
இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அங்குள்ள ஊர்க்காவல் படையை சேர்ந்த சத்யமூர்த்தி இந்த இளைஞரின் செல்போனை பிடுங்கி உடைத்து வீசியிருக்கிறார். இதனால் அந்த போன் சிதறியது.
காயமடைந்த இருவரும் திருச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டிய காவல்துறையே இப்படி அத்து மீறி நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.





