இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில் முன்கூட்டிய திட்டமிட்ட பல நிகழ்ச்சிகள் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை.
தான் இலங்கை வராமல் போனது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெரும் சர்ச்சைக்கிடையே கொழும்பில் பொதுநலவாய மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையிலும் சமீபத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ள பலத்த எதிர்ப்பு உள்ளதால் இதுபற்றி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இரண்டு முறை கூடியது.
ஆனால் சாதக, பாதகங்கள் விவாதிக்கப்பட்டதே தவிர முடிவு எடுக்க முடியவில்லை. இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.





