வடக்கு மாகாணசபையின் 2வது அமர்வில் ஆளுநர் சந்திரசிறியின் உரையை புறக்கணிக்க அனந்தி முடிவு!!

401

Ananthiவடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவுள்ள 2வது அமர்வின் போது இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில் இராணுவத் தளபதியாகவிருந்த வேளையிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.

குறிப்பாக கிருசாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு கொல்லப்பட்டதும் இவரது காலத்திலேயே எனத் தெரிவித்த அனந்தி, இவர் தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்ததாகவும் கூட்டிக் காட்டியுள்ளார்.

இவை தவிர இவரை வவுனியா தடுப்பு முகாம்களின் இணைப்பாளராக நியமித்த வேளையிலேயே முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர். இவற்றை தாம் மறக்க முடியாதென அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அத்துடன் முதலமைச்சரே ஆளுநரை வேண்டாம் என்று சொன்ன பின் அவரது உரையை கேட்கும் தேவை எமக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக மற்றொரு மாகாணசபை அங்கத்தவர் கே.சிவாஜிலிங்கம் தான் நாளைய ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை பகிஸ்கரிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாகாண சபையின் அங்கத்தவரான சுகிர்தன், ஆளுநரின் சிறப்புரையை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அதன் தலைவர்களை நாய்கள் என பகிரங்கமாகப் பேசியவர் இந்த ஆளுநர். நடந்து முடிந்த தேர்தலில் கூட கூட்டமைப்பின் தேர்தல் தோல்விக்காக முழு அளவில் வேலை செய்தவர்.

பகிரங்கமாக மேடையேறி ஆளும் தரப்பின் வெற்றிக்காக பாடுபட்டவர். இவருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டுமென்ற எந்த தேவையுமில்லை எனக் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பல கூட்டமைப்பு அங்கத்தவர்களும் நாளைய ஆளுநரது சிறப்புரையினை பகிஸ்கரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.