இறந்து விட்டதாக சொன்ன தாய் மீண்டு வந்து புகார் கொடுத்த அவலம்!!

660

சொத்திற்காக உயிரோடு இருக்கும் தாயை இறந்ததாக பொய் சொல்லி இறப்பு சான்றிதழ் வாங்கிய மகனும் பேரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் அருகில் உள்ள பொன்னுமதுரை புதுப்பட்டியை சேர்ந்தவர் மருதயம்மாள். இவருக்கு வயது எண்பத்தி ஐந்து. இவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

மகனது பெயர் வெள்ளை சாமி. அனைவரையும் திருமணம் செய்து கொடுத்த மருதயம்மாளிற்கு 3 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. அதில் விவசாயம் செய்து வரும் வருமானத்தில் பேத்திகளோடு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் மகன் வெள்ளைச்சாமி மற்றும் பேரன் ஜெகநாதனும் சேர்ந்து மருதயம்மாளை அந்த நிலத்தை தங்களுக்கு எழுதி கொடுக்க சொல்லி வற்புறுத்தினர்.

அதற்கு மருதாயம்மாள் மறுத்திருக்கிறார். அதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளைசாமியும் ஜெகநாதனும் மருதாயம்மாள் இறந்து விட்டதாக போலியாக சான்றிதழ் கொடுத்து போலியாக வாரிசு சான்றிதழையும் பெற்று மகன் ஜெகநாதன் பெயரில் அந்த நிலத்தை மாற்றி விற்று விட்டனர்.

தனது நிலம் விற்கப்பட்டதை அறிந்த மருதயம்மாள் அதிர்ந்து போனார். ஆரம்பத்தில் போனது போகட்டும் விற்ற பணத்தில் என் மகள்கள் இருவருக்கும் ஆளுக்கு ருபாய் 20000 கொடுத்து விடு என்று மகனிடம் கெஞ்சியிருக்கிறார்.

அதனை மகன் ஏற்றுக் கொள்ளாததால் தீர்க்கமான முடிவுடன் கடந்த வாரத்தில் திண்டுக்கல் எஸ் பி இடம் மகனின் பேரில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வெள்ளைசாமியையும் ஜகநாதனையும் பொலிஸார் கைது செய்தனர்.

தனக்கு சொந்தமான நிலத்தை தனது அனுமதியின்றி எட்டு லட்சத்திற்கு விற்க நினைத்த மகனை பொலிஸிடம் பிடித்து கொடுத்த மருதாயம்மாள் தனது பேத்தி வீட்டில் இருந்தாலும் இன்னமும் கூலி வேலை செய்து அதில்தான் கஞ்சி குடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.