தாயாரின் கனவை 19 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றிய இளைஞர்!!

606

கார்கில் போரில் வீரமரணமடைந்த தந்தை பணியாற்றிய அதே படைப்பிரிவில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் பணியில் சேர்ந்து இளைஞர் ஒருவர் தனது தாயாரின் கனவை நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்று, ராணுவ அதிகாரியாக வெளியே வந்துள்ளார் உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த ஹிதேஷ் குமார் என்ற இளைஞர்.

இவரின் தந்தை பச்சன் சிங் ராஜ்புதனா ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் 2வது பட்டாலியனில் காஷ்மீரில் உள்ள டோலோலிங் பகுதியில் பணியாற்றி வந்த போது, கார்கில் யுத்தக்களத்தில் கடந்த 1999 ஜூன் 12ஆம் திகதி வீர மரணம் அடைந்தார்.

அப்போது பச்சன் சிங்கின் மகன் ஹிதேஷ் குமாருக்கு 6 வயதே ஆகியுள்ளது. தந்தை இறந்த நாளில் தானும் இந்திய ராணுவத்தில் ஒரு நாள் பணிக்கு சேர வேண்டும் என்று சபதமேற்றுக்கொண்டுள்ளார் ஹிதேஷ் குமார்.

19 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிக்கு சேர்ந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ஹிதேஷ் குமார், தற்போது டேராடூன் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து ராணுவ அதிகாரி ஆகியுள்ளார்.

மட்டுமின்றி தன்னுடைய தந்தை மரணம் அடைவதற்கு முன்னர் பணியாற்றிய அதே படைப்பிரிவில் ஹிதேஷ் பணியாற்ற உள்ளார்.

ராணுவ அதிகாரி பணியில் சேர்ந்த உடன் முசாஃபர்நகரில் உள்ள தந்தையின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் ஹிதேஷ்.

தன்னுடைய மற்றும் தாயாரின் 19 ஆண்டு கால கனவு தற்போது நனவாகியுள்ளதாகவும், நாட்டிற்காக பணியாற்றப்போவது பெருமையாக உள்ளதாகவும், நேர்மையுடன் பணியாற்றுவேன் என்றும் குறிப்பிட்டார்.