கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இவ்விழாவை அமிதாப்பச்சன் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி, நடிகர்கள் கமலஹாசன், ஷாருக்கான் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் கமலஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது..
நான் கல்லூரிக்கு போகவில்லை. இளம் வயது நினைவுகளில் சினிமாவே நிறைந்து உள்ளது. 3½ வயதில் நடிக்க வந்துவிட்டேன். சினிமாவை பற்றி ஸ்டூடியோக்களிலும் திரைப்பட விழாக்களிலும்தான் கற்றுக் கொண்டேன். திரைப்பட விழாக்கள் சினிமா பற்றித்தரும் கோவில்களாக உள்ளன.
கொல்கத்தா திரையுலகுக்கு நிறைய பங்களிப்பை செய்துள்ளது. இந்திய சினிமாவின் திறமையான பிதாமகன்கள் இங்கிருந்துதான் வந்து இருக்கிறார்கள். சினிமா நவீன கலை. அதை அவமதிக்க கூடாது. மேற்கு வங்கத்தில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்காததால்தான் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க வந்தேன் என்று கூறுவது சரியல்ல. இது கொடுத்து வாங்கும் விஷயம் அல்ல.
அடுத்த முறை நான் தவறு செய்தால் இங்குள்ள அரசு எனக்கு ஆதரவு தராது. நான் அரசியல்வாதி அல்ல. ஏற்கனவே ஹேராம் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் மேற்கு வங்கத்தில் எனக்கு ஆதரவு கிடைத்தது. காந்திய வழி சரியா, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் வழி சரியா என்ற கேள்விக்கு பதில் சொல்வது கஷ்டம்.
அமெரிக்காவால் கூட பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. இரு வேறுபாடுகளை அணுக கூடிய சரியான வழி எது என்று தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நோக்கம் ஒன்றாகத்தான் இருந்தது. காந்திக்கு தேச தந்தை என்ற பட்டம் கொடுத்ததே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்று கமலஹாசன் கூறினார்.





