வவுனியா ஏ9 வீதியில் நிதி நிறுவனத்தினத்தினால் குழப்பநிலை!!

699

நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் பெறப்பட்ட உழவு இயந்திரத்திற்கு கட்டுப்பணம் செலுத்த தவறிய காரணத்தினால் உரிமையாளரிடம் இருந்து நிதி நிறுவனத்தால் கொண்டு சென்ற உழவு இயந்திரத்தின் பாகங்களை அகற்றி வேறு பழைய பாகங்களை பூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் மற்றும் உரிமையாளரால் பிடிக்கப்பட்ட சம்பவம் வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

நிதிநிறுவனம் ஒன்றில் இருந்து உழவு இயந்திரம் ஒன்றினை மாதாந்த கடனடிப்படையில் (லீசிங்) கொள்வனவு செய்த வவுனியா நொச்சிமோட்டையை சேர்ந்த ஒருவர், கடந்த சில மாதங்களாக மாதாந்த கட்டுப்பணத்தினை செலுத்த தவறியமையினால் குறித்த நிதி நிறுவனத்தினால் கடந்த ஐந்து நாட்களிற்கு முன் குறித்த உழவு இயந்திரம் மீள எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உழவு இயந்திரத்தை மீள் கொண்டு சென்றவர்களால் உழவு இயந்திரத்தை நிதிநிறுவனத்திற்கு கொண்டு செல்லாமல் தாண்டிக்குளம் சந்திக்கருகில் உழவு இயந்திர பாகங்களை பிரித்து பழைய பாகங்களை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையறிந்த உரிமையாளர் அவ்விடம் சென்று அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்குள்ளவர்களும் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்களும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் ஒரு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவ்விடம் விரைந்த வவுனியா பொலிஸார் குறித்த உழவு இயந்திரம் மற்றும் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளிலும் வவுனியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.