இலங்கை மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ உட்பட 300 பேர் கைது!!

328

vaikoஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக் கூடாது, பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றன.

மதுரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக வைகோ காலை 6.15 மணிக்கு ரெயில் நிலைய மேற்கு வாயில் வழியாக ரெயில் நிலையத்திற்குள் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.

அங்கு சென்னைக்கு புறப்பட தயாராக நின்றிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பொலிஸ் துணை கமிஷனர் தமிழ்சந்திரன் தலைமையில் பொலிஸார் விரைந்து சென்று வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் 300 பேரை கைது செய்தனர்.

மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பூமிநாதன், மாநில தொண்டர் அணி செயலாளர் பாஸ்கரசேதுபதி, மாநில மருத்துவ துணைச்செயலாளர் டாக்டர் சரவணன், நிர்வாகிகள் சின்னசெல்லம், சுருதி ரமேஷ், மகபூப்ஜான், ஆசைத் தம்பி, முனியசாமி, ராமர், ஊடக ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைகோ உள்ளிட்ட 300 பேரையும் பொலிஸார் வேனில் ஏற்றி தமுக்கம் மைதானத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 50 நிமிடம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.