யாழில் பாடசாலை சீருடையுடன் சிறுமியின் சடலம் மீட்பு : சோகத்தில் உறைந்த கிராமம்!!

433

 

பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி, கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியினை சேர்ந்த சிவனேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி நேற்று பாடசாலைக்குச் சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார். மாணவி வீட்டிற்கு வந்த நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார்.

தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார்.

எனினும், அங்கு வரவில்லை என சிறுமியின் பெரியதாயார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியியை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.

விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் பூராகவும் தேடியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.

சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு தாயாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டுள்ளனர். சிறுமி சீருடைகள் அற்ற நிலையில் அரை நிர்வாணமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுகின்றது. அத்துடன், சிறுமி அணிந்திருந்த தோடும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கழுத்தில் காணப்படும் அடையாளத்தினை வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.