24 மணிநேர பாதுகாப்பையும் மீறி ஊடுருவிச் சென்ற இலங்கையர்கள் : தீவிர தேடுதலில் பொலிஸார்!!

584

இலங்கையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு சட்டவிரோதமாக படகில் சென்று, தப்பியோடிய இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இன்று அதிகாலையில் உச்சிபுளி அருகே வலங்காபுரி கடற்கரைப் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் பைபர் படகில் ஊடுருவியுள்ளதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சவுக்குத் தோப்புக்குள் மறைந்திருந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த சகாய பஸ்திபன் என்ற கான்டீபனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், படகில் இருந்து தப்பி ஓடிய அரவிந்த் மற்றும் பாக்கியம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

கேரள கஞ்சாவை இலங்கைக்கு கடத்திச் செல்லவே இங்கு வந்ததாகவும் கஞ்சா குறித்து தகவல் கிடைக்காததால் ஏஜெண்டைத்தேடி உடன் வந்தவர்கள் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள கஞ்சா குறித்து இராமநாதபுரம், உச்சிபுளி, கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள முக்கிய கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் 24 மணி நேர பாதுகாப்பையும் மீறி இலங்கை படகு ஊடுருவிய விவகாரம் இராமநாதபுரம் கடலோரப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.