வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் மாணவிக்கு இடம்பெற்ற அநீதி : மாணவிக்காக களத்தில் இறங்கிய லிங்கநாதன்!!

374

தேசிய விளையாட்டு நிகழ்விலிந்து வவுனியாவில் பாடசாலை மாணவி புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விசாரணை நடத்த உறுதிமொழி அளித்துள்ளார்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவந்த மாணவி சண்மகானந்தம் நிதர்சினி (17) தேசிய ரீதியில் இன்று (29.06) திருகோணமலையில் நடைபெறவுள்ள பழுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றிருந்த நிலையிலும், குறித்த மாணவியின் பெயர் பரிந்துரைக்கப்படாத காரணத்தினால் தேசிய மட்டத்தில் நடைபெறும் பழுதூக்கும் போட்டியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஊடகஙகளில் செய்திகள் வெளிவந்தன.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பாடசாலை மற்றும் வவுனியா கல்வி வலய மட்டத்தில் தேசிய ரீதியில் நடைபெறவுள்ள பழுதூக்கும் போட்டியிலிருந்து குறித்த மாணவி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவி மற்றும் பெற்றோருடனும் கலந்துரையாடியதன் பின்னர், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வடக்கு கல்வி அமைச்சர் குறித்த மாணவி தேசிய ரீதியில் பழுதூக்கும் போட்டியிலிருந்து புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.