மகளுக்காக கோடிக்கணக்கான சொத்துக்களை தியாகம் செய்த பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

1027

கேரளாவில் வசிக்கும் முதிய தம்பதி தங்கள் மகளின் நலனுக்காக குடியிருக்கும் வீட்டை மறுவாழ்வு மையமாக மாற்றுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்.

என். கமலாசன் – சி.கே. சரோஜினி தம்பதிகள் 70 வயதை கடந்தவர்கள். இவர்களுடைய ஒரே மகள் பிரியா (39) மாற்றுத்திறனாளி ஆவார்.

தங்கள் காலத்திற்கு பிறகு பிரியா தனிமைப்படுத்தப்படுவார் என்ற கவலை அவர் பெற்றோருக்கு ஏற்பட்டது.

அதனை போக்கும் விதமாக தாங்கள் வசிக்கும் வீடு மற்றும் சொத்துக்களை அரசின் வசம் ஒப்படைக்கிறார்கள். இந்த தம்பதியருக்கு கொல்லம் மாவட்டத்திலுள்ள கயிலா கிராமத்தில் 83 செண்ட் நிலமும், வீடும் இருக்கிறது. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.3 கோடியாகும்.

அதனை மாற்றுத்திறனாளி பெண்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற மறுவாழ்வு மையமாக மாற்றிக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அதே போல கோழிக்கோட்டில் இரண்டு வீடுகளும், 15 செண்ட் நிலமும் இருக்கிறது. அதில் ஒரு வீட்டில் தற்போது வசித்து வருகிறார்கள். தங்கள் இறப்புக்கு பிறகு அதனையும் மறுவாழ்வு மையமாக மாற்றிக்கொள்ளும்படி உயில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இது குறித்து கமலாசன் கூறுகையில், எங்கள் மகள் அந்த வீட்டிற்கு விரைவில் சென்றுவிடுவாள். அங்கு அவளைப் போன்றவர்களோடு மகிழ்ச்சியாக வாழும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கும். அதன் மூலம் எங்கள் இறப்பு அவளை பாதிக்காது என்று நம்புகிறோம்.

அவளை உறவினர்கள் வசம் ஒப்படைப்பதற்கு மனம் ஒப்புக்கொள்ள வில்லை. ஏனெனில் எங்கள் இறப்புக்கு பிறகு எங்கள் உறவினர்களிடம் அவள் நன்றாக வாழ்வாள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

எங்கள் முடிவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற மாற்றுத்திறனாளி பெண்களும் பலன் அடைவார்கள் என கூறியுள்ளார்.