வவுனியாவில் 18 பேருக்கு டெங்கு : மக்களுக்கு எச்சரிக்கை!!

713

வவுனியாவில் சில பகுதிகளில் டெங்கு அதிகரித்துக்காணப்படுவதாகவும், நேற்று வரையில் 18 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கும்போது, கடந்த வாரத்தில் கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்டவீதி போன்ற பகுதிகளில் பெருமளவான டெங்கு நுளம்புகள் பெருக்கெடுப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து இதனைத்தடுத்து முறியடிக்கும் நடவடிக்கையில் சுகாதாரப் பரிசோதகர்கள் 8 பேரடங்கிய குழுவினர் பொது அமைப்புக்கள், கிராம மக்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அத்துடன் தற்போது குறித்த பகுதிகளிலிருந்து குட்செட் வீதிக்கு டெங்கு நுளம்புகள் பரவிவருவதாகவும் அப்பகுதியில் டெங்கு நுளம்பை அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகளிலுள்ள மாடி வீடுகள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கடும் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இங்கிருந்து வெளிப்பகுதிகளுக்கு டெங்கு நுளம்பு பெருகும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது மாலை வேளைகளில் பெய்துவரும் மழையினால் மேலும் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாகவும்,

பொதுமக்கள் தமது இருப்பிடங்களில் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்தும் சுகாதாரப்பரிசோதகர்ளின் நடவடிக்கையில் இணைந்து கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.