இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்யவில்லை எனவும், அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
டெல்லியின் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதில் 8 பேரின் உடற் கூறு ஆய்வு முடிந்துள்ளது.
அதில் யாரும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று பொலிசார் தரப்பில் கூறப்படும் நிலையில், இறந்த நாராயண் தேவியின் மகள் சுஜாதா நாக்பால், என் தாய், சகோதரர்கள், சகோதரி, குழந்தைகள் இறந்ததை ஊடகங்கள் கொச்சைப்படுத்தி தற்கொலை என்று கூறுகிறார்கள்.
நான் என் தாயிடம் தினந்தோறும் போனில் பேசிக் கொண்டு தான் இருப்பேன். இறப்பதற்கு அன்று இரவு கூட போனில் பேசினேன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.
எங்கள் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள், அவர்களுக்கு எந்த விதமான சாமியார்கள் மீது எந்த மூடநம்பிக்கை கிடையாது.
இது தற்கொலை அல்ல. ஊடகங்கள் தான் இதைத் தற்கொலை என கூறுகின்றனர். எங்கள் குடும்பத்தினர் யாரும் தற்கொலை செய்திருக்கமாட்டார்கள். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட வீட்டில் மூதாட்டி நாராயண் தேவி (77) தரையில் படுத்தவாறு இறந்துகிடந்தார் . மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தனர்.
இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா(57). மற்றொரு மகள் இங்கு இல்லை.
பவனேஷ் மனைவி சவிதா (48), சவிதாவின் மகள் மீனு (23), நிதி (25), துருவ் (15). லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33) ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.