பாதியில் நிறுத்தப்பட்ட கல்யாணம் : விரக்தியில் மணமகன் எடுத்த விபரீத முடிவு!!

438

கன்னியாகுமரி அருகே திருமணம் பாதியில் நின்றதால் மனமுடைந்த மணமகன், நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாறவிளை பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி பினு(31). நீண்ட நாட்களாகவே திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மனமுடைந்து இருந்த பினுவிற்கு, கோழிப்போர்விளை பகுதியில் பெண் கிடைத்தது.

இதனால் மகிழ்ச்சியில் திளைத்த பினுவின் குடும்பம் உடனடியாக திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். அதன்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மண்டைக்காடு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தவேளையில், திடீரென சினிமாவில் வரும் ஒரு வசனம் போல, “திருமணத்தை நிறுத்துங்கள்” என குரல் ஒலித்துள்ளது.

இதனையடுத்து பதறிப்போன குடும்ப உறுப்பினர்கள், என்ன நடக்கிறது என விசாரிக்கையில், வந்திருந்தவர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் எனவும், மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால்,தற்போது திருமணம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், இதனை மீறி திருமணம் செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என பினு குடும்பத்தாரை எச்சரித்துள்ளனர்.

சிறுமிக்கு 18 வயது நிரம்பியவுடனே, திருமணம் மற்றும் அதுதொடர்பான சடங்குகள் நடத்தப்படும் என பினு வீட்டார் உறுதியளித்ததையடுத்து சிறுமியை அழைத்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினார்.

ஒருபுறம் விழாக்கோலத்தில் இருந்த நிகழ்வு, திடீரென அமைதி மயமாக மாற, மறுபுறம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கவிருந்த திருமணமும் நின்றுவிட்டதே என பினு மனமுடைந்துள்ளார். இதனால் இரவு முழுவதும் சோகமாகவே இருந்த பினு, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விடிந்ததும் காலையில் அறையை திறந்தபொழுது பினு சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுத குடும்பத்தார், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடனடியாக பினுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர்களின் தவறான முடிவால் திருமணம் தடைபட்டதோடு, இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.