இரு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை!!

436

அநுராதபுரம் – விஜயபுர பிரதேசத்தில் குடும்பஸ்தரான வர்த்தகரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதங்களுடன் வந்த குழுவினர் இந்த நபரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜயபுர ராகுல மாவத்தையில் வசித்து வந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் வாகனங்களை விநியோகித்து வருவதுடன், வாகனங்களை பழுதுபார்க்கும் தொழில் நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தனது வாகனத்தை பழுது பார்க்க வருமாறு கூறி அநுராதபுரம் தீபானி கல்லூரிக்கு எதிரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு கூரிய ஆயுதங்களுடன் இருந்த நபர்கள், வர்த்தகரை வெட்டியுள்ளனர்.

வெட்டு காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்த வர்த்தகர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.