வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியிலிருந்து செல்லும் பிரதான வீதி கடந்த ஒரு மாதகாலமாக தோண்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் இரவு வேளைகளில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் பகல் வேளைகளிலும் பேருந்துகள் செல்வதில் பல நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.
வவுனியா கருமன்காடு காளிகோவில் வீதியிலிருந்து செல்லும் பிரதான வீதியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடந்த ஒருமாத காலத்திற்கு முன்னர் செப்பனிடுவதற்காக அப்பகுதி தோண்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இன்று வரையில் அதை நிரவி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் அவ்வீதியால் செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள், ஆடைத் தொழிற்சாலை வாகனங்கள், அரச திணைக்களங்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள், அதிபர்கள் அதிகாரிகள் பெரும் நெருக்கடி நிலையில் தமது பயணத்தை எதிர்கொண்டுள்ளனர்.
வவுனியா நகரசபையினரால் ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ள இவ்வீதி திருத்தும் பணிகள் கடந்த ஒரு மாதகாலமாக திருத்தி முடிக்கப்படவில்லை என்றும் இதனை உடனடியாக திருத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பாக நகரசபைதலைவரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,
வவுனியா கருமன்காட்டு காளிகோவில் வீதி பணிகள் இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்றே எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகளை உடன் துரிதப்படுத்துமாறும் வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.