வவுனியாவின் கின்னஸ் உலக சாதனையாளன் கணேஸ்வரனுக்கு பாடசாலை சமூகத்தால் மதிப்பளிப்பு!(படங்கள்)

844

அண்மையில்  உலகில் அதிக நீளமான ‘மின் இணைப்பு பொருத்தி’ (Power Strip)  தயாரித்து கின்னஸ் உலக சாதனை  புத்தகத்தில் இடம்பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாளருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன்  மற்றும் தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில்  கலந்து கொண்டு  வெண்கலம்  வென்று  இலங்கை வடமாகாணம் வவுனியா மாவட்டம் மற்றும்  வவுனியா தமிழ் மத்திய  மகாவித்தியாலயம் என்பவற்றுக்கு பெருமை  சேர்த்த மாணவன்  சிவானந்தன் கிந்துசன், பயிற்றுவிப்பாளர்  நவநீதன்   ஆகியோரை  கௌரவிக்கும்  நிகழ்வு  நேற்று  11.07.2018  புதன்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில்  இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் சாதனையாளர்கள்  பாடசாலை சமூகத்தினரால்   மலர்மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு  காலைப் பிரார்த்தனை வேளையில்  பொன்னாடை போர்த்தியும்  வாழ்த்துப்பா  வழங்கியும்  கௌரவிக்கும்  நிகழ்வும்  இடம்பெற்றது.

இந்த கின்னஸ் உலக சாதனையானது இலங்கையின் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும் வட மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும்  வவுனியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் மற்றும்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் கின்னஸ் சாதனையாகவும் விளங்குவதுடன்  மேற்படி சாதனை நாயகனான  கனகேஸ்வரன் கணேஸ்வரன் அவர்கள்  தன்னுடைய இந்த சாதனைக்கு  காரணமான  கல்லூரி  தாய்க்கு தனது  உலக சாதனை  சான்றிதழை  சமர்ப்பணம்  செய்துள்ளார் . தன்னுடைய   சாதனை சான்றிதழை  கல்லூரியின் அதிபரிடம் கையளித்து பாடசாலைக்கு  பெருமை சேர்த்துள்ளார்.