பாம்பு கடித்து இறந்த தாய் : சடலத்துடன் பைக்கில் சென்ற இளைஞர்!!

322

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பாம்பு கடித்து மரணமடைந்த தனது தாயின் உடலை, பிரேத பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் 38 கிலோ மீற்றர் தூரம் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் ஊரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாய் குன்வார் பாய் பாம்பு கடியால் இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக, ராஜேஷ் பொலிசாருக்கு தகவல் கொடுத்தபோது, அவர்கள் பிரேத பரிசோதனைக்காக குன்வாரின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.

ஆனால், அதற்கு வாகன வசதி செய்து தர அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், வாகனத்தில் கொண்டு செல்ல பணமில்லாததால் ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்திலேயே தனது தாயின் உடலை கொண்டு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி, தனது தாயின் உடலை இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் கட்டி வைத்து, தனது ஊருலிருந்து சுமார் 35 கிலோ மீற்றர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு பயணம் செய்தார். இந்த காட்சியை பார்த்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அபிஜித் அகர்வால் கூறுகையில், ‘ஆம்புலன்சுக்கு அவர் தகவல் கொடுத்திருந்தால், நாங்கள் அனுப்பி வைத்திருப்போம். அது போன்ற எந்த முயற்சியிலும் அவர் ஈடுபடவில்லை.

ஆனாலும், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்று வாகன வசதியில்லாமல், இருசக்கரம் உள்ளிட்ட வசதியில்லாத வாகனத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.