அகில இலங்கை ரீதியில், கொழும்பு றோயல் கல்லூரியில் 01.07.2018 மற்றும் 02.07.2018 திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இரண்டு பதக்கங்களை வென்றுள்னர்.
அந்தவகையில் சண்முகநாதன் சஞ்சயன் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
அத்துடன் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற சான்றிதழையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
அதேபோல் விபுலானந்தா கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் தியாகராஜா நாகராஜா தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவர்களின் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், தேசிய ரீதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் இருவர் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அந்தவகையில் பாடசாலை மாணவர்கள் மேலும் சாதனை படைக்க முடியும் இருந்தபோதும் பயிற்சிக்கான உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் சிரமப்படுகிறார்கள், அவைகள் நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் பல சாதனைகளை நிலைநாட்ட முடியும் என தெரிவித்தார்.