தாலிக் கொடியை அறுத்த திருடன் : பொது மக்களை அச்சுறுத்திய பொலிஸார்!!

627

கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் நேற்று மாலை பெண் ஒருவருடைய தாலிக் கொடியை அறுக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தபோதும் பொலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இம்மாதமும் இரு பெண்களிடம் நகைகள் அறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அக்கராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடும்பஸ்தருடைய மனைவியின் தாலிக் கொடியை அறுக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களும், குறித்த குடும்பஸ்தரும் இணைந்து திருடர்களை பிடித்து அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாட்டை பதிவு செய்ய அக்கராயன் பொலிஸார் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் வாய்தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாருடைய பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.