வவுனியாவில் வர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை!!

425

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள், விடுதிகள், வாகன திருத்துமிடங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நபகரசபையின் 4 ஆவது அமர்வு நேற்றைய தினம் நகரசபையில் இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா நகரப்பகுதியில் உள்ள சில வீடுகளில் விபச்சாரம் இடம்பெறுவதாக நகரசபை உறுப்பினர் பாயிஸ் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதன்போது நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், சில விடுதிகளிலும் விபச்சாரம் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியதோடு சில விடுதிகள் போதியவசதிகள் இன்றி இயங்குவதாகவும் இவற்றை நகரசபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது பதில் அளித்த நகரசபைத் தலைவர் இ.கௌதமன், வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், விடுதிகள், வாகன திருத்துமிடங்கள் என்பவற்றை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விண்ணப்பப் படிவத்தை பெற்று பதிவு செய்யும் போது குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

அத்துடன் வீதிகளில் வைத்து வாகனங்களை திருத்தும் வாகன திருத்துமிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.