உயிர் பிரியும் கடைசி நேரத்தில் உயிர் கொடுத்த ஆசிரியரின் பேச்சு : நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!!

699

புதுக்கோட்டையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு பேச்சு கொடுத்தே ஆசிரியர்கள் உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருபவர் அருண்பாண்டியன்.

கூலித்தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன், நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்து வீடு திரும்பும்பொழுது, கடை ஒன்றில் நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்பொழுது திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் மயங்கி தரையில் சரிந்தான்.

இதனையடுத்து உடனடியாக சக மாணவர்கள் அவனை மீட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். ஆனால் நிலைமை மோசமானதாக இருந்ததால், பிராணவாயுவின் உதவியுடன் மாணவனை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் திறமையால் வெறும் 15 நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தனர். அங்கு மாணவர்கள் மற்றும் அவர்களுடன் சென்ற செவிலியர் வேகமாக மாணவனை வாகனத்திலிருந்து இறக்கி, மருத்துவமே பிரிவுக்கு அளித்து சென்றனர்.

மாணவன் ஒரு புறம் உயிருக்கு போராடி கொண்டிருக்க, தகவலறிந்து அருண்பாண்டியனின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், பிராணவாயுவை எடுத்தால் சிறுவன் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அங்கிருந்த ஒரு சிலர், விருப்பப்பட்டால் சிறுவனை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கூற, அருண்பாண்டியனின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

அதேசமயம், கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு நடந்தவை பற்றி செவிலியர் ஒருவர் ஆசிரியரிடம் தெரிவிக்க, பதறிப்போன ஆசிரியர்கள் கையில் காயத்திற்கு மருந்து கூட போடாமல் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்ற ஆசிரியர்கள் மாணவன் விழி பிதுங்கி உயிருக்கு போராடுவதை பார்த்து, அவனுடைய காதருகே சென்று மணிகண்டன்.. தம்பி விழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்ற அடுத்தடுத்து பேச சிறிது நேரத்திலேயே மாணவன் உடலில் அசைவு தெரிய ஆரம்பித்தது. அடுத்த 7 நிமிடங்களில் மாணவன் எழுந்து அமர்ந்து ஆசிரியர்களின் பேச ஆரம்பித்தான்.

அனைவருக்கு இந்த சம்பவம் ஆச்சர்யம் அளித்த வேளையில், மாணவனின் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நன்றி கூறியதோடு, அருண்பாண்டியனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தனர்.

இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு மாணவனுக்கு பொருத்தப்பட்டிருந்த பிராண வாயுவினை நீக்கி அவனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.