நண்பனை தாக்கி, அவரிடம் இருந்த தேசிய அடையாள அட்டையை கொள்ளையிட்டு, அதனை திரும்பி கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் கப்பம் கோரிய மூன்று பேரை உடுகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காலி, உடுகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முறைப்பாடு செய்த நபரின் நண்பர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
உடுகம தெற்கு பகுதியில் வசித்து வரும் 28 வயதான தொழிலாளியிடமே சந்தேக நபர்கள் கப்பம் கோரியுள்ளனர்.
இந்த நபர் அளுத்வத்தை சந்தி பகுதியில் வந்து கொண்டிருந்த போது இரண்டு சந்தேக நபர்கள் அங்கு சென்று தாக்கியுள்ளதுடன் அவரது சட்டை பையில் இருந்த தேசிய அடையாள அட்டையை பலவந்தமாக பறித்துச் சென்றுள்ளனர். அதனை திரும்ப கேட்ட போது 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தால், அடையாள அட்டையை திரும்ப தருவதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற மற்றுமொரு நபர், பணத்தை கொடுத்தால் மாத்திரமே அடையாள அட்டையை வழங்க முடியும் எனக் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து உடுகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைதசெய்துள்ளதுடன் தேசிய அடையாள அட்டையையும் பறிமுதல் செய்துள்ளனர்.