மீண்டும் ஒரு நிர்மலா தேவி : கல்லூரி மாணவிகளுக்கு நடந்தேறிய கொடுமை!!

359

கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவிகளுக்கு மது அருந்த கொடுத்து, விடுதி காப்பாளர் தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஹாப்ஸ்காலேஜ் பகுதியில் தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான ‘தர்சனா’ பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன், ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

அதில் கலந்துகொள்வதற்காக 6 மாணவிகளை விடுதி காப்பாளர் புனிதா அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற மாணவிகளை மது அருந்த வற்புத்தியதோடு, அவர்களிடம் தவறாக நடக்கவும் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்து பாதியிலேயே கிளம்பிவிட்டனர். பின்னர் இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்கள் உறவினர்களுடன் வந்து விடுதி நிர்வகித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாணவிகளின் எதிர்காலம் கருதி புகார் ஏதும் அளிக்காமல் வீடுகளுக்கு அழைத்து சென்றனர். ஆனால் இதனை கவனித்த அருகாமையில் பூ கடை வைத்திருக்க கூடிய பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டதோடு, இருவரின் பேரிலும் பெண்கள் வன்கொடுமை மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில் தலைமறைவான ஜெகநாதன் மற்றும் புனிதாவை தற்போது பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டது தொடர்பாக நிர்மலா தேவி என்ற பேராசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்தை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.