74 பேரிடம் மோசடி : புது கார், புது பங்களா.. சொகுசு வாழ்க்கையில் மிதந்த அழகிய இளம்பெண்!!

502

தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 74 பேரிடம் இருந்து ரூ. 3 கோடி மோசடி செய்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளந்தீபன் (33) என்பவர் இந்திய உணவு கழகத்தில் பணிக்காக முயற்சித்து கொண்டிருந்தார்.

இதை அறிந்த சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா (32) என்பவர் தான் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்தார்.

மேலும் ரூ. 5 லட்சம் கொடுத்தால் போதும் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஷோபியா கூறினார்

இதை உண்மை என்று நம்பிய இளந்தீபன் ரூ. 3 லட்சத்துக்கு 50 ஆயிரத்தை ஷோபியாவிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட ஒரு வாரத்தில் பணி நியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்தார்.

அந்த ஆணையுடன் இளந்தீபன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகியபோதுதான் அது போலியானது என்று தெரியவர அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில், பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஷோபியாவும் அவரது தாய் ஆரோக்கியசெல்வியும் (50) பல இளைஞர்களிடம் இருந்து பல லட்சங்களை வாங்கிக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் கடலூரில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்த ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கியசெல்வியும், ரவிச்சந்திரனும் கடந்த 21-ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் ஷோபியா தலைமறைவானார்.

ஷோபியாவை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர் மொத்தம் 74 பேரிடம் இருந்து ரூ.3 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளது தெரியுவந்தது. இதையடுத்து தனிப்படையினர் கடலூரில் ஷோபியாவை கைது செய்துள்ளனர்.

பணம் கொடுப்பவர்களுக்கு பணி நியமன ஆணையை தருவதும் போலி ஆணை என தெரிந்ததும் பணம் கேட்போரை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் ஷோபியா வாடிக்கையாக கொண்டிருந்தார்.

பெற்ற பணத்தில் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளதும், புதிய கார், புதிய இரு வீடுகளை அவர் கட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.