யாழ்ப்பாணம் – தும்பளைப் பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர், தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய சத்தியசோதி சிறிகௌசி என்ற பெண் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கழுத்தில் 12 தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தும்பளைப் பகுதியில் பிள்ளையுடன் வசித்து வரும் குறித்த பெண் வீட்டில் தனிமையில் ஆடைகளை தைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதன்போது அவருக்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர் ஒருவர் அவருடைய வாயை பொத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் நபரின் பிடியிலிருந்து தப்பப் போராடி சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





