தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் காங்கிரஸ் பெண் எம்எல்ஏவை ஆபாசமாக திட்டிய தமிழ் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை நினைவு கூரும் வகையில் தஞ்சை அடுத்த விளாரில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது.
இதைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுவர் மற்றும் பூங்கா, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறி நெடுஞ்சாலை துறையினர் இடித்தனர். இது தொடர்பான தொலைக்காட்சி ஒன்றில் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த புதன் இரவு 8.15-க்கு நடந்தது.
விளவங்கோடு காங்கிரஸ் பெண் எம்எல்ஏ விஜயதாரணி, பாஜ பிரமுகர் சேகர் பங்கேற்று விவாதித்தனர். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் கடைசி தொலைபேசி அழைப்பாளராக வந்த ஒருவர் விஜயதாரணியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் ஆபாச வார்த்தையில் திட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயதாரணி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். தொலைக்காட்சி அலுவலகம் ராயபுரத்தில் செயல்படுவதால் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வடசென்னை இணை ஆணையர் ஸ்ரீதருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது மேற்பார்வையில் ராயபுரம் பொலிஸ் ஆய்வாளர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி எண் மூலம் விசாரித்ததில் போனில் பேசியது மந்தவெளியை சேர்ந்த கஷ்மீர் ராஜ் என்ற தமிழ்தாசன் (45) என்று தெரியவந்தது.
எம்.ஏ. பி.எட் படித்த இவர், சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிகிறார் என்பதும் தெரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு மந்தைவெளி வீட்டில் வைத்து தமிழ்தாசனை பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது செல்போன், சிம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்தாசன் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான தமிழ்தாசன் மதிமுக அனுதாபி. அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர்.எஸ்.மங்கலம் கிராமம்.




