வெளிநாட்டில் இலங்கையர் மர்மமான முறையில் மரணம் : அதிர்ச்சியில் குடும்பம்!!

500

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கட்டாரில் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்த இலங்கையர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கல்லேவெல புலனவெவ பிரதேசத்தை சேர்ந்த அசங்க பிரேமரத்ன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர உதவுமாறும், மரணத்திற்கான காரணம் என்ன என்பதனையும் தேடுமாறும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அரசாங்கத்திடம் கேட்டுள்ளனர்.

தனது கணவனின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர தேவையான கடிதங்கள் அனைத்தையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி கட்டார் நாட்டிற்கு சாரதியாக சென்றுள்ளார். அன்றைய நாள் முதல் அவர் இலங்கையை சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் மாடி கட்டடம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார் என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 28ம் திகதி அசங்க பிரேமரத்னவின் நண்பனின் மனைவி, அசங்கவின் மனைவிக்கு அழைப்பேற்படுத்தி 3 மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து அசங்க உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் அசங்கவுடன் தங்கியிருக்கும் நண்பர்கள் எவரும் தனக்கு தகவல் வழங்கவில்லை என மனைவி கூறியுள்ளார்.

உயிரிழந்தவருக்கு 9 வயதுடைய மகள் மற்றும் 3 வயதுடைய மகனும் உள்ளார். எனினும் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அசங்கவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதியில் இருந்து இதுவரை அசங்க தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை எனவும், அவருடன் தங்கியிருக்கும் நண்பர்கள் வீடியோ ஒன்றை imo தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அவர் கீழே விழுந்த இடத்தில் படிந்த இரத்தத்தை வீடியோவாக எடுத்து அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.