கேரளாவுக்கு வரப்போகும் பேராபத்து : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

289

வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும் என பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி கூறியுள்ளார்.

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மெல்ல அதிலிருந்து மீள தொடங்கியுள்ளது.

கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கவிதைகள் வாயிலாகவும், அறப் போரட்டங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவிரமாக பேசிவரும் சுகதாகுமாரி, வரும் காலங்களிலும் கேரளா இது போன்று தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார்.

அவர் கூறுகையில், கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும் நாசமாகிவிட்டபின் இந்த நாடு எப்படி கடவுளின் சொந்த நாடாக இருக்கும்.

44 நதிகள் இங்குள்ளன. பல நதிகள் ஆலைக்கழிவு, வீட்டுக்கழிவுகளை சுமந்து நோய்வாய்ப்பட்டுப் போனது. முடிந்தமட்டும் மணலை தோண்டி நதிகளின் ரத்தநாளங்களை துண்டித்தாகிவிட்டது. இதை சரிசெய்ய முடியுமா? என்று கேள்விகளை வைக்கிறார்.

வடநாட்டில் ஏற்பட்டது போல பட்டினிச்சாவுகள் கேரளாவில் நடக்கவில்லை. வறட்சி ஏற்படவில்லை. ஆனால் ஆடம்பரமாக வாழவிரும்புகிற காரணத்தால் கேரளா மக்கள் தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே வெட்டிக்கொள்கிறார்கள்.

வெள்ளம் வரும்போது சதுப்புநிலக்காடுகள் மற்றும் நெல்வயல்கள் மட்டுமே அந்த நீரை உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை. தற்போது அந்த நிலங்களில் வீடுகளும்,வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், எஸ்டேட்களும் அமைத்துவிட்டதால், இயற்கை பாழானது என்கிறார்.

கேரளா தற்போது சந்தித்துள்ள பேரிடரில் இருந்து மீண்டு வந்தாலும், இயற்கையை பாதுகாக்க மறந்தால் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.