திருகோணமலை, கந்தளாய் பிரதான வீதியில் தம்பலகாமம் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில், தனது சகோதரியுடன் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி மீது கெப் வாகனம் ஒன்று மோதியதாலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம், சுவாமிமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுந்தரலிங்கம் பிரியங்கா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அவர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், திருகோணமலையிலிருந்து கந்தளாய் பகுதியை நோக்கிச் சென்ற வெள்ளை நிற கெப் வாகனம் வீதியில் சென்ற யுவதி மீது மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரத்தில் 8 ஏ மற்றும் 1 பீ சித்திகளைப் பெற்று அப்பகுதிக்கு பெருமை சேர்த்த திறமையான மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.





