இன்று முதல் இடியுடன் கூடிய மழை : பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

656

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

வளிமண்டலவில் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவுக்கு மழை பெய்யக் கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.