சுழிபுரம் மாணவி ரெஜினா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

1040

யாழ். சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரெஜினாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்த சாட்சியாளர் ஒருவரின் மகளான சிறுமி ஒருவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார், இதன் காரணமாகவே வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமியை நீதிமன்றில் முற்படுத்தி அவரிடம் சாட்சியம் பெறப்பட வேண்டும் எனவும், அதன் மூலமே இந்த வழக்கின் சரியான போக்கை உறுதிப்படுத்த முடியும், அத்துடன் குற்றவாளி எவராவது வெளியில் இருந்தால் அவரைக் கைது செய்ய முடியும் எனவும் சட்டத்தரணி சுகாஸ் நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டோர் சார்பான விண்ணப்பதை ஏற்ற மல்லாகம் நீதிவான் நீதிமன்று, சம்பந்தப்பட்ட சிறுமியையும் வழக்கின் மற்றொரு சாட்சியான சிறுவனையும் வரும் 4ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம்வரை சந்தேகநபர்கள் 3 பேரினதும் விளக்கமறியலும் நீதிமன்றால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் ரெஜினா அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த ஜூன் 25ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மேலும், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.