மீனவர்களுக்கு கட்டாயக் காப்புறுதி – இல்லையேல் கடலுக்குள் செல்ல முடியாது..

424

fisherman

இலங்கையின் தென்பகுதி மற்றும் தென் மேற்குக் கரையோரங்களில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை, கடற்காற்று காரணமாக 48 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் காப்புறுதி செய்யாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, சீரற்ற காலநிலையின்போது காணாமல் போயிருப்பவர்களில் 17 பேரைக் கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் மீனவர்கள் காப்புறுதி செய்திருப்பதாகவும், இது தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாகவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா கூறுகின்றார்.

அண்மையில் வீசிய கடும் காற்று மற்றும் சீரற்ற கடல் நிலை காரணமாக பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழந்திருப்பதையடுத்தே, மீனவர்கள் கட்டாயம் காப்புறுதி செய்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் மிராண்டா தெரிவித்தார்.

காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடற்தொழில் திணைக்களம் இந்த காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. வருடாந்தம் 750 ரூபா மற்றும் 1500 ரூபா என இரண்டு வகையாகப் பணம் செலுத்த வேண்டிய வகையில் வைத்திய தேவைக்கான கொடுப்பனவு, உயிரிழப்புக்கான கொடுப்பனவு என்ற வகையில் இந்தக் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் மிராண்டா கூறினார்.

இருந்த போதிலும் யுத்த மோதல்கள் தீவிரமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்வாதார முயற்சிகள் இன்னும் சீராக இடம்பெறாத காரணத்தினால், வறுமை காரணமாக மீனவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே காப்புறுதி செய்திருகின்றார்கள்.

வறுமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் தமது பகுதியில் காப்புறுதி செய்து கொள்ள முடியாதிருப்பதாக முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளரான சிவராசா கிருபாகரன் கூறுகின்றார்.

-BBC தமிழ்-