வவுனியாவில் சமூக பொலிஸ் சேவை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு!!

620

சமூக பொலிஸ் சேவை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு ஒன்று வவுனியாவில் இன்று (28.08) நடைபெற்றது.

வவுனியா பிரதேச தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், பிரதேச சர்வமத குழுவின் தலைவர் போதகர் பி.என்.சேகர் தலைமையில் குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் செயலமர்வு இடம்பெற்றது.

இச்செயலமர்வில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த சமூக பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பிரியங்கர டீ சில்வா வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

‘மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு’ செயல்திட்டமும் சமூக பொலிஸ் சேவையும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில் 45 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 23 சமூக பொலிஸ் சேவைக் குழுக்கள் கலந்துகொண்டதுடன் நிர்வாகம், சமூக சேவை, நீதி, சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

வவுனியா பிரதேச சமூக பொலிஸ் குழுக்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய சமூக பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பிரியங்கர டீ சில்வா,  ஒரு நாட்டில் குற்றங்கள் நடைபெற்றபின் அதற்கு தண்டனை வழங்குபவர்களாக பொலிசார் இருக்க கூடாது குற்றங்கள் நடைபெறு முன் விரைந்து செயற்பட்டு குற்றங்களை தடுத்து மக்களை காப்பாற்றுபவர்களாக பொலிசார் செயற்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை காரணங்காட்டி நாங்கள் பின்தங்கியுள்ளோம் என்று பொலிசார் கூற முடியாது. 50 வருடங்கள் கம்போடியாவில் யுத்தம் நடைபெற்ற போதும் அவர்கள் பொலிஸ் துறையில் ,அபிவிருத்தியில் முன்னேறியுள்ளார்கள் என தெரிவித்தார்.

நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்தின் நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூக பொலிஸ் சேவைக்குழுக்கள், சர்வ மத குருமார்கள், வவுனியா பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.