வவுனியாவில் இரண்டாவது நாளாக தொடரும் தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பு : மக்கள் அவதி!!

675

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகள் பல்வேறு காரணங்களை முன்வைத்து நேற்று (18.09.2018) மதியம் முதல் காலவறையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும், புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும், இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் இன்றைய தினம் அனைத்து மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றையதினம் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினர் தனியார் பேரூந்து ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதிலும் அது பயனளிக்கவில்லை.

இப் பணிப்புறக்கணிப்பு காரணமாக சுந்தரபுரம், கணேசபுரம், உக்கிளாங்குளம், சமயபுரம் போன்ற பல கிராமங்களிலிருந்து நகரத்திற்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வெளி மாவட்டங்களிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையினர் பேரூந்துகளை வரவழைத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ள போதிலும் அவ் பேரூந்துகள் வவுனியாவிலிருந்து வெளி மாவட்டங்களுக்கே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.