வவுனியா ஓமந்தை மாணவர்களுக்கு பொலிசாரால் குடிநீர் வழங்கிவைப்பு!!

593

வவுனியா ஓமந்தை மாணிக்க இலுப்பைக்குளம் அ.த.க பாடசாலைக்கு மாணவர்களின் குடிநீர் தேவை ஓமந்தை பொலிசாரினால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை மாணிக்க இலுப்பைக்குளம் அ.த.க பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்ப்பிரச்சினைக்கு இன்று (19.09) காலை முதல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்கள் கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்ற குறித்த பாடசாலையிலுள்ள குழாய்கிணறில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் குடிநீர் வற்றிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கு குடிநீர்ப்பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் ஓமந்தை பொலிசாரின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனினால் இன்று காலை பாடசாலைக்கு குடிநீர் வழங்கி மாணவர்களின் நீண்டகால தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் சிவசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா, கனகராயன்குளம் புளியங்குளம் உதவி பொலிஸ் அதிகாரி டயிள்யூ. கே.பொன்சேகா, ஈஷி மிஷன் பூரண சபையின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.