வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி திருப்பி அனுப்பப்பட்டார்!!

310

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலிருந்து மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற 18 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமி அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த 18 வயதுக்கும் குறைவான வயதுடைய யுவதி மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கடந்த வருடம் சவூதி அரேபியாவில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட றிசான என்ற பெண்ணை, அந்த நாட்டுக்கு அனுப்பி வைத்திருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனமே இந்த யுவதியையும் போலி ஆவணங்களை தயார் செய்து, பணிப் பெண் தொழிலுக்கு அனுப்பி வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

யுவதி கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்துள்ளார். யுவதியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் உண்மையான வயது 17 முதல் 18 ஆக இருக்கும் என கூறியுள்ளனர்.

வறிய குடும்பத்தை சேர்ந்த இந்த யுவதிக்கு பெற்றோரும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அப்துல் மொஹமட் என்ற போலி பெயரில் சுமார் 10 வருடங்கள் சவூதியிலும் பெயர் அறியாத மத்திய கிழக்கு நாடொன்றிலும் பணிப்பெண்ணாக தொழில் புரிந்துள்ளார்.

இதன் பின்னர் ஓமானில் வீட்டுப் பெண்ணாக தொழில் புரியும் போது ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அங்குள்ள இலங்கை தூதரகத்தின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்திருந்த தகவலின் அடிப்படையில், யுவதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது.