என் கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கௌசல்யாவிடம் கூறிய அம்ருதா!!

305

தெலுங்கானா மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணத்தால் கணவரை இழந்த அம்ருதாவை, சாதிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கௌசல்யா சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பிரணய் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரணயை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி அம்ருதாவின் தந்தை, சித்தப்பா மற்றும் சிலரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அம்ருதா தற்போது தனது மாமியார் வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சாதி மறுப்பு திருமணத்தால் தனது கணவரை இழந்தவருமான கௌசல்யா தெலுங்கானாவிற்கு சென்று அம்ருதாவை தனது வழக்கறிஞருடன் சந்தித்துள்ளார்.

அம்ருதாவிடம் பேசிய கௌசல்யா தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறினார். மேலும், தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை அம்ருதாவிடம் காட்டினார்.

பின்னர் கௌசல்யாவிடம், ‘எத்தனை பேரை தான் தண்டிப்பது. உங்கள் கணவர் கொலை செய்யப்பட்டதற்கு சாதி தான் காரணமா?’ என அம்ருதா கேட்டார். அதற்கு ’சாதி மட்டும் தான் காரணம்’ என கௌசல்யா பதிலளித்தார்.

மேலும் பேசிய அம்ருதா, ‘பிரணய் கொலைக்கு காரணமான 7 பேரையும் தூக்கில் போட வேண்டும். எனது சித்தப்பா வெளியே வந்தால் எனக்கும், எனது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்’ என கூறியுள்ளார்.

அதைக் கேட்ட கௌசல்யா, ‘நீங்கள் நடந்ததை எல்லாம் நீதிமன்றத்தில் கூறுங்கள், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்’ என தெரிவித்தார். தனது பெற்றோரின் ஜாமீன் மனுவை கௌசல்யா 58 முறை எதிர்த்ததாக அவரது வழக்கறிஞர் அம்ருதாவிடம் கூறினார்.