தன்னை விட 14 வயது குறைவான மனைவியை கொன்ற கணவன் : தாய் இறந்தது கூட தெரியாமல் கேம் விளையாடிய மகன்!!

418

சென்னையில் மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் அவரை கணவர் கொலை செய்த நிலையில், தாய் இறந்தது கூட தெரியாமல் அவரின் மகன் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. அரசு அலுவலகத்தில் ஆடிட்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் இரண்டாவது மனைவி மகேஸ்வரி. தம்பதிக்கு கவிதா என்ற மகளும் சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக அண்ணாமலைக்கும் மகேஷ்வரிக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று, தலையில் பலத்த காயங்களுடன் மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மகேஷ்வரியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு அண்ணாமலை, கவிதா, சந்தோஷ் ஆகியோரிடம் விசாரித்தனர்.

அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அண்ணாமலைக்கு 65 வயதாகுகிறது. இவருக்கு முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்துள்ளது.

இதையடுத்து தன்னை விட 14 வயது குறைவான மகேஷ்வரியை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். அண்ணாமலை பெயரில் வீடும், வங்கி லாக்கரில் 25 சவரன் நகைகளும் இருந்த நிலையில் அதை தன் பெயரில் எழுதி தர கணவரை மகேஷ்வரி வலியுறுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அண்ணாமலை, தோசை கரண்டியால் மனைவி தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

கொலை நடந்தபோது சந்தோஷ், வீட்டில் உள்ள ஒரு அறையில் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். ஆனால், அவருக்கு எதுவும் தெரியவில்லை.

வேலை முடிந்து வீட்டுக்கு காரில் வந்திறங்கிய கவிதாவுடன் அண்ணாமலையும் எதுவும் தெரியாதது போல வந்துள்ளார். மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிஸ் விசாரணையில் முன்னுக்குபின் முரணாக அண்ணாமலை பேசியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் மனைவியை கொன்றதை ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.